
குஜராத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகளும் 12.30 மணி நிலவரப்படி 29சத வாக்குகள் பதிவாகியுள்ள தாக ஏஜன்சி செய்திகள் கூறுகின்றன.குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 93- தொகுதிகளில் தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் உள்ள ஏ.எம்.சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அமித்ஷா ஓட்டு போட்டார்.
குஜராத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம் என ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். குஜராத்தில் மாற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். குஜராத் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குஜராத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக உங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று தனது ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காந்திநகரில் 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
