
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 240 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 320 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கு வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காசிமேடு, வங்கக்கடலில் நேற்று அதிகாலையில் உருவான மாண்டஸ் புயல், தீவிர புயலாக நேற்று மாலை வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
காற்றின் வேகம் அதிகரிப்பால் சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சென்னை மெரினா, பெசன்ட்நகர், பட்டினப்பாக்கம், எண்ணூர், காசிமேடு, திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், மஸ்தான் கோவில் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் தோன்றிய ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழுந்து, தூண்டில் வளைவு, தடுப்பு கற்களில் வந்து ஆக்ரோஷத்துடன் மோதி செல்கின்றன. போலீசார் கண்காணிப்பு தீவிரம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், பொது மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு வந்துவிடாத படி, தடுப்பு வேலி அமைத்ததோடு, ரோந்து வாகனம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட்நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவுறுத்தலையும் மீறி, பொதுமக்கள் சிலர் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், எண்ணூர், காசிமேடு கடலோரப் பகுதிகளில் கடல் அழகை பார்க்க கூடினர். சிலர் விபரீதத்தை உணராமல் ‘செல்பி’ மோகத்தால் அங்கு நின்று புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை விரட்டினர். பாதுகாப்பான இடங்களில்… கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படகுகள், வலைகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வார்ப்புகளில் பத்திரமாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. 864 பைபர் படகுகளும் கடல் சீற்றத்தால் சேதமடையாதவாறு கிரேன் மூலம் தூக்கி ராட்சத கயிறுகள் கொண்டு மீனவர்கள் மேடான பகுதியில் கட்டி வைத்துள்ளனர். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 80 விசைப்படகுகள் கிருஷ்ணாம்பேட்டை மீன்பிடித்துறைமுகத்திலும், 20 விசைப்படகுகள் மசூலிப்பட்டினம் ஆற்று பகுதியிலும் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்