மாண்டஸ்’ புயல்-சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடல்..

Published:

1027786 rain - 2026

மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

1027779 top - 2026

‘மாண்டஸ்’ புயலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளையும், மரக்கிளைகளை அகற்ற தேவையான மர அறுவை எந்திரங்களையும், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த ஜே.சி.பி., டிப்பர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மழை பெய்யும்போது சுரங்கப்பாதைகளில் உடனடியாக மோட்டார் பம்புகளை இயக்கி மழைநீரை வெளியேற்றவும் மாநகராட்சியின் சார்பில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

பூங்காக்கள், திடல்கள் மூடல்

மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றவும், அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மக்களின் பாதுகாப்பு கருதி அவற்றை அகற்றவும், கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தகடுகள் போன்ற இலகுவான பொருட்களை கட்டி பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

கூட்டத்தில், ‘மாண்டஸ்’ புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழையும், காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மரம் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்து விழக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் 9-ந்தேதி (இன்று) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அவர் அறிவித்தார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம்

எனவே, பொதுமக்கள் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத்திடல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், ‘மாண்டஸ்’ புயலின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையின் விடிய விடிய பலத்த காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை..

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை, வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்காலில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மேலும், புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையில் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வருகிறது. கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், எழும்பூர், சென்னை சென்ட்ரல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img