
சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருப்பது 4 மணி நேரமாக குறைந்தது சபரிமலை உடனடி முன்பதிவை ரத்து செய்தும் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இனி ஆன்லைன் முன்பதிவு மட்டுமே என்பதால் காத்திருப்பு நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. 18-ம் படியில் இந்தியன் பட்டாலியன் படை வீரர்கள் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன் பதிவு செய்திருந்தனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை அதிகரித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது.
ஆனாலும் சராசரியாக நாளொன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் 19 மணி நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சரம்குத்தியில் இருந்து பக்தர்கள் காத்திருப்பு நிலை தொடர்ந்தே வந்தது. இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேரை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கென தனி வரிசை ஏற்படுத்தவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று முதல் சபரிமலையில் தனிவரிசை முறை அமல்படுத்தப்பட்டது. நேற்று தரிசனத்திற்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 478 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் தனிவரிசை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் காத்திருப்பு நேரம் குறைந்தது. சரம்குத்தி பகுதியில் இருந்து முன்பு பக்தர்கள் காத்திருப்பது 6 மணி நேரமாக இருந்த நிலை மாறி தற்போது 2 மணி நேரத்தில் தரிசனம் பெற்றனர்.
மேலும் 18-ம் படியில் இந்தியன் பட்டாலியன் படை வீரர்கள் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு நிமிடத்திற்கு 70 பக்தர்களை படியேற்றியதும் காத்திருப்பு நேரம் குறைவுக்கு மற்றொரு காரணமாகும். இதற்கிடையில் தற்போது உடனடி முன்பதிவை ரத்து செய்தும் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இனி ஆன்லைன் முன்பதிவு மட்டுமே என்பதால் காத்திருப்பு நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.