
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்களான, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, வாய்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதைகள். இந்தியாவிற்கு அவரது பங்களிப்பு அழிக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கிறது” என்றார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளருமான மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டும் பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடி, “பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபரான மாளவியா, கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் அதற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்றும் அவர் கூறினார்.






