

2023 ஆங்கில புத்தாண்டு முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பேர் 18-ம் படி ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின், ஐய்யப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து நடை அடைக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 30-ந்தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இன்று புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர். மேலும் நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பேர் 18-ம் படி ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 11-ந்தேதி இரவு எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் என்றும், ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பம்பையிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.பம்பை நதியில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் அழுதாநதியில் நீராடி மகிழ்ந்தனர்.