

கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108திவ்யதேசங்களில் ஒன்றான வடபத்ரசயன பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
விருதுநகர் மாவட்டம்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெரு விழாவை முன்னிட்டு இன்று காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக பெரிய பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னார் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ கோயில்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் அவதரித்த சிறப்புமிக்க தலமாகும். ஆண்டாள் மார்கழி மாதம் திருப்பாவை பாடி, பாவை நோன்பு இருந்து பகவான் கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்டாள் மார்கழி நீராற்று உற்சவம் நடைபெற்று வருகிறது விழாவில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அதன்படி இந்த ஆண்டு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 23-ம் தேதி ஆண்டாள் பிறந்த வேதபரான் பட்டர் இல்லத்தில் பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சன்னதியில் உள்ள கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பரமபத வாசல் முன்பாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரிய பெருமாள் பின்னர் ஆண்டாள் ஆகியோர் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பரமத வாசல் வழியாக எழுந்தருளினர்.ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராப்பத்து: ஜன.2 முதல் 11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுற்றி பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர்சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், சேவா காலம் என மறுநாள் அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: ஜன. 8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். மதியம் 3:00 மணிக்கு அங்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.