
சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் விரும்பும் பிரசாதங்களில் ஒன்றான அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள .உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபரிமலையில் அரவணை பிரசாதம் விற்பனை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதமான அரவணையில் சேர்க்கப்படும் ஏலக்காயில் அதிக அளவில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதன் பேரில் ஏலக்காய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் அதிக அளவில் பூச்சிமருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில், இன்று(ஜன11) அரவணை விற்பனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் படி இன்று மாலை 4.30 மணி முதல் அரவணை விற்பனை நிறுததப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சபரிமலை வரலாற்றில் புகார் காரணமாக முதன் முறையாக அரவணை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் போர்டு அறிவித்துள்ளது.





