
உத்தரப் பிரதேசத்தின், ரேபரேலியில் குர்பக்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள தேநீர்க்கடையின் மீது இன்று சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி மற்றும் மோசமான கட்சித் திறன் காரணமாக சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேநீர்க் கடையின் மீது மோதியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த 10 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் லல்லாய், லல்லு, ரவீந்திரன், விருந்தாவன் மற்றும் சிவ மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அசோக் பாஜ்பாய், ராம் பிரகாஷ் திவாரி, திபேந்திர லோதி மற்றும் ஷ்ரவன் லோதி ஆகிய நால்வரும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் அடர் பனிமூட்டம் 7பேர்பலி…
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். டெல்லியில் தொடர்ந்து 5ம் நாளாக நேற்றும் கடும் குளிர் அலை வீசியதால் மக்கள் உறைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்றும் குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்தது.டெல்லியில் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களைவிட குறைவான வெப்பநிலை பதிவானது. அடர் பனிமூட்டம் காரணமாக பார்வை திறன் 25 மீட்டருக்கு குறைவாக குறைந்தது. இதன் காரணமாக, ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. கடும் குளிர் அலை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்திலும் நேற்று கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உன்னாவில் விரைவுச்சாலையில், பனி மூட்டத்தால் நேபாளம் நோக்கி சென்ற பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதின.இதில் பஸ் டிரைவரும், நேபாளத்தை சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதே போல, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் பிப்ராலி கிராமத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் பலியாகினர். பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்த விபத்துக்கள் காரணமாக, வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஜார்கண்டில் கடும் குளிர் நிலவி வருவதால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளுக்கு ஜனவரி 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குளிர் இன்னும் குறையாததால் வரும் 14ம் தேதி வரை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.* 260 ரயில்கள் ரத்துஉபி, டெல்லி, பீகார், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் பனி மூட்டம் நிலவுவதால் நேற்று மட்டும் 260 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 82 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 140 பயணிகள் ரயில்களும் அடங்கும். 40 புறநகர் ரயில்களும் ரத்தாகி உள்ளன. 335 ரயில்கள் தாமதமாக வந்துள்ளன.




