
தமிழக கவர்னரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார். போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மற்றும் தபால் வழியாக இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்பவர் பொதுக் கூட்ட மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார். அவர் பேசிய அவதூறு பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவர்னரை தரம் தாழ்ந்து அவதூறு பரப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இ.பி.கோ. 124 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மற்றும் தபால் வழியாக இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கவர்னரை பற்றி பேசிய பேச்சு சமூக வலை தளங்களில் பரவியதை தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவுடன் அவர் பேசிய வீடியோ பதிவும் இணைத்து போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, வீடியோ பதிவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.