மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் மும்பை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் அதிகாலை 5 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ரேபோலி கிராம பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலையில பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அதிவேகமாக வந்து லாரி எதிரே வருவதை கவனிக்காமல் இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தூக்க கலக்கத்தில் விபத்து நடைபெற்றதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பேருந்து பாலத்தின் மீது மோதியதில் 40 பயணிகள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு கோரக்பூரில் இருந்து மகராஜ்கஞ்ச் என்ற இடத்திற்கு 51 பேருடன் சென்ற பேருந்து, அங்குள்ள பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 24 பயணிகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மஹராஜ்கஞ்ச் சதர் கோட்வாலி காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரவி ராய் தெரிவித்தார்.
அதில், 16 பயணிகள் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டது. மஹ்ராஜ்கஞ்ச் மாவட்ட நீதிபதி சதேந்திர குமார் மற்றும் எஸ்பி கௌஸ்துப் ஆகியோர் இன்று காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர்.