அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலைமுருகன்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுவதை யொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.
பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.
ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்
23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.