புதுச்சேரியில் ஜி 20 மாநாடு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.
ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக்கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடையும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு தற்போது துவங்கி நடைபெறுகிறது. நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
கடந்தாண்டு ஜி-20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை விஞ்ஞானிகள் உரையுடன் மாநாடு தொடங்குகிறது.
ஜி-20′ கருத்தரங்கம்: சென்னையில் நாளை துவக்கம்..
ஜி-20′ அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை ஜன.31ல் துவங்குகிறது. இதில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, 20 நாடுகள் மட்டுமின்றி, ஒன்பது நட்புறவு நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல், பிப்., 2 வரை, மூன்று நாட்களுக்கு கல்வி துறை சார்ந்த கருத்தரங்கம், ஜி – 20 அமைப்பின் கல்வி பிரிவு தலைவர் சைதன்யா பிரசாத், மத்திய கல்வித் துறை இணை செயலர் நீட்டா பிரசாத் தலைமையில் நடக்கிறது.
கல்வித்துறை சார்பில், சென்னை ஐ.ஐ.டி.,யில், 31ம் தேதி; நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில், பிப்., 1, 2ம் தேதிகளிலும் கருத்தரங்கம் நடக்கின்றன.இந்த கூட்டத்தில் பங்கேற்க, ‘ஜி — 20’ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஒன்பது நட்புறவு நாடுகளின் பிரதிநிதிகளும் சென்னை வரத் துவங்கி உள்ளனர்.
அவர்களை வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்ளே ரங்கோலி கோலம் போடப்பட்டு, ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற வாசகங்கள்அடங்கிய பேனரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜி — 20 கருத்தரங்கிற்கு வரும் பிரதிநிதிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியே வர, தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் மாமல்லபுரம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பபடுகிறது.
ஹோட்டல், ரிசார்ட், விடுதி, ஹோம் ஸ்டேகளில் தங்கியிருக்கும் அனைவரின் விபரங்களும் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். புராதன சின்னங்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிப்ரவரி 1ம் தேதி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. புராதன சின்னம் அருகே சாலையோர கடைகள் நடத்தவும் அனுமதி இல்லை. தற்போது மாமல்லபுரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.