சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 – 2016 –ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின்கீழ் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் பஸ் – ரயில்களுக்கு ஒரே டிக்கெட் வழங்கும் முறை அறிமுகமாகிறது. இதன்மூலம் ஒரே டிக்கெட்டில் பஸ் – ரயிலில் பயணம் செய்யமுடியும். இது மிகவும் பயன்தரக்கூடியதாகும். மேலும், பயணிகள் ரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. எனினும், சரக்குகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. தற்பொழுது டீசல் விலை குறைந்து வரும் நிலையில் சரக்கு கட்டணம் உயர்ந்திருப்பது – மக்களிடையே சற்று சிரமத்தை ஏற்படுத்துவதுடன், அதைச் சார்ந்த பொருள்களின் விலையும் உயரும்.எனவே இதனை தவிர்த்திருக்கலாம். நகரங்களில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் அகலப் பாதை மற்றும் மின் மயமாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிப்பதுட்ன் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் பாதையை மேம்படுத்த 8.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். பயனிகளுக்கான முன்பதிவு காலம் 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பண்டிகைக் கால டிக்கெட் நெரிசலை எளிதாகத் தவிர்க்க முடியும் என்பது அனைவரும் பெரிதும் வரவேற்கும் ஒன்றாகும். அத்துடன் ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட் வெளியிடப்படும்போது புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் – கூடுதல் ரயில்களும் அறிவிக்கப்படும். ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்துள்ள முதல் ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதன்மூலம் ஏற்கனவே கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு முடிவடையாத நிலையில் இருக்கும் அனைத்து வகையான ரயில்வே திட்டங்களும் உடனடியாக முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற முனைப்பை இந்த அரசு காட்டுகிறது. மேலும் ரயில்வே துறையும் – இந்திய விண்வெளி ஆய்வு மையமும்(IS R O ) இணைந்து ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கில் விபத்தைத் தடுப்பதற்காக புதிய ரேடியோ சிக்னலுடன் ஒலி–ஒளி கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும், ரயில்வே ஊழியர்களின் துறை சார்ந்த அறிவை மேம்படுத்தவும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டப்ப்படக்கூடியதாகும். அதேபோல், ரூ.120 கோடியில் லிப்டுகள் மற்றும் எஸ்குலேட்டர்கள் அமைப்பதால் பயணிகளின் படியேறும் நிலை மாறுவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயன்தரும். ரயில்களில் உள்ள 17 ஆயிரம் கழிப்பறைகளை சுத்தப்படுத்தி நவீனப்படுத்துவதுடன் நாடெங்கும் உள்ள 400 ரயில் நிலையங்களில் அதிநவீன வை – பை இணையதள வசதி செய்யப்படுவதுடன் ரயில்வே துறையைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்காக பல்வேறு மொழிகளில் இணைய தளமும் துவங்கப்படும் -என்று ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எதிர்கால சந்ததிகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் ஒரு தொலைநோக்கு பட்ஜெட் என்கிற வகையில், முழுமனதுடன் இந்திய ஜனநாயகக் கட்சி பாராட்டி வரவேற்கிறது. அதேவேளையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும் வண்ணம், பெரம்பலூர் ரயில்வே திட்டம் உட்பட எந்த புதிய அறிவிப்புகளும் வராதது ஏமாற்றமளிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும்,ரயில்வே நிதிநிலை விவாதத்தின் போது தமிழகத்திற்கான திட்டங்கள் வெளியாகும் என நம்புகிறோம்!
ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாரிவேந்தர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari