சென்னை: உணவு மானியத்துக்கு பணம் என்ற வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்குப் பதிலாக நுகர்வோருக்கு உணவு மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இச்சீரழிவு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பதற்காக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அதன் அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தது. உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது ஆகியவை தான் சாந்தகுமார் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம் என்பது அடுத்த பரிந்துரையாகும். சாந்தகுமார் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமே அதில் உள்ள பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்றும், அவற்றை செயல்படுத்தினால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டிவரும் என்றும் மத்திய அரசை எச்சரித்திருந்தேன். இப்பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரேநேரத்தில், ஒட்டுமொத்தமாக செயல்படுத்தினால் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, இவற்றில் முதல் இரு பரிந்துரைகளை விடுத்து கடைசி பரிந்துரையை மட்டும் செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது. உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக உணவு மானியத்தை பணமாக வழங்க வேண்டும் என்ற இந்த பரிந்துரையை முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அனைத்து யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இந்த பரிந்துரையை 3 வழிகளில் செயல்படுத்தலாம் என்று மத்திய உணவுத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இவற்றில் முதலாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வெளிச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கூறுவது ஆகும். இரண்டாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை சந்தை விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக பொதுமக்கள் கூடுதலாக எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது ஆகும். மூன்றாவது, உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை இப்போது உள்ளவாறே வழங்குவது; ஆனால், குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்குவது என நிபந்தனை விதிப்பதாகும். முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தை அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு முன்மொழிந்துள்ள 3 வழிகளில் கடைசி வழியை நடைமுறைப்படுத்தினால், மக்களுக்கு சில தேவையற்ற அலைச்சல்கள் தான் ஏற்படுமே தவிர, வேறு பாதிப்புகள் ஏற்படாது. அதுமட்டுமின்றி, ஆதாருடன் இணைக்கப்படுவதால், போலி குடும்ப அட்டைகளும் ஒழிக்கப்படும். ஆனால், 3 வழிகளை தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் எதைக் கடைபிடிப்பது என்பதை யூனியன் பிரதேச அரசின் விருப்பத்திற்கு விடாமல், முதல் வழியை, அதாவது மக்களின் வங்கிக் கணக்கில் மானியத்தைச் செலுத்திவிட்டு, உணவுப்பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது; கண்டிக்கத்தக்கது. உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு குறைந்தது ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்ற எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால், இது பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது ஆகும். ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுவினியோகத் திட்டம் கொண்டுவரப்பட்டது. உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நேரடி கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இப்பரிந்துரை உன்னதமான இரு திட்டங்களையும் அழித்துவிடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை உருவாகும். எனவே, பொதுவினியோகத்திட்டத்தையும், விவசாயத்தையும் அழிக்கும் சக்தி கொண்ட இந்தப் பரிந்துரையை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பொது வினியோக முறையை அழிக்கத் துடிப்பதா என மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari