அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கர்நாடக தேர்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், முதற்கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல் பணிகளை கடந்த 5-ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட கர்நாடக மாநில அதிமுகவினர் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் விவாதிப்பதற்காக அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றறு .
கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி செயற்குழு உறுப்பினர்களான மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஏற்கெனவே கர்நாடக மாநில தேர்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை டெல்லியில் தம்பிதுரை எம்.பி சந்தித்து பேசிய விவரம், கூட்டணி அமைத்து போட்டியிடுவது, அம்மாநில பாஜக ஏற்காவிட்டால் தனித்து களம் காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் கூடுதல் அதிகாரம் வழங்குவது, கட்சியில் அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் ஆணையத்தில் கட்சியின் உச்சபட்ச பதவி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நீடிப்பதை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.