
வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் கிராமத்திற்கு இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால்நாரை எனப்படும் வெளிநாட்டு பறவைகள் வலசை வரத் துவங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 முதல் 20 பறவைகள் மட்டுமே வந்த நிலையில் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க துவங்கி இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரித்து ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வர துவங்கியுள்ளது.

கிராமத்தின் கண்மாய் கரையில் அமைந்துள்ள புளிய மரத்தில் கூட்டம் கூட்டமாக கூடுகட்டி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது. ஆண்டிற்கு 6 மாதங்கள் இந்த மரத்தில் குடியிருக்கும் இந்த பறவைகள் இனப்பெருக்கம் முடிந்து பின்னர் 6 மாதம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் இதே மரத்திற்கு வலசை வருவதை 4 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளது.
வெளிநாட்டு பறவைகளின் வருகையால் தங்களது கிராமம் சுற்றுலா தளம் போல் காட்சியளிப்பதாகவும் வெளியூர் மக்கள் மரத்தில் தங்கியுள்ள பறவைகளை அதிசயத்துடன் பார்த்து செல்வதால் வெளிநாட்டு பறவைகளை தாங்கள் ஒரு விருந்தினர் போல வரவேற்று அந்த பறவைகளை பாதுகாப்பதாகவும் பறவைகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.