கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி, பெங்களூரு மாநகரில் பிரதமர் மோடி சாலை பேரணியில் ஈடுபட்டுள்ளார். “நமது பெங்களூரு நமது பெருமை” என்ற பெயரில் திறந்த வாகனத்தில் பேரணியாக செல்லும் மோடிக்கு மக்கள் மலர்தூவி வரவேற்று வருகின்றனர்.
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரபரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பெங்களூருவில் பிரதமர் மோடி தெற்கு முதல் கிழக்கு பகுதி வரை 26 கிலோமீட்டர் தூரம் திறந்த வேனில் சென்று மக்களிடம் ஆதரவை திரட்டுகிறார்.
இன்று காலை பெங்களூருவின் ஜேபி நகர் பகுதியில் இருந்து கார் மூலமான தனது பிரம்மாண்ட சாலை பேரணியை தொடங்கினார். இந்த மெகா பேரணியில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடியை வரவேற்றனர்.
சாலையில் இரு புறமும் திராளாக இருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து பிரதமர் உற்சாகப்படுத்தினார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, ஹனுமன் போன்ற வேடங்களில் வந்து பேரணியில் பலர் பங்கேற்றனர்.