மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட பட்டியலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டதால் மதுரை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்தது நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறியிருந்த நிலையில் அவரது பெயர் நோட்டீஸிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சருக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர், திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு பதில் வேறு பேச்சாளரை நியமித்தது மதுரை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.