கர்நாடக தேர்தல் முடிவு: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாரதிய ஜனதா ஏற்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சி தலைமை கண்டிப்பாக ஆராயும். மக்களிடம் நெருக்கமான அனுகுமுறையை ஏற்படுத்த கர்நாடக தேர்தலை பார்க்கிறோம். அந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார். நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக தேர்தலில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.