வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.
புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.
அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இதுபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.