தி.மு.க. அரசு மீது புகார் அளிக்க எடப்பாடி பழனிசாமி நாளை கவர்னரை சந்திக்கிறார்.
சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை காலையில் மனு அளிக்க உள்ளார்.
இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க உள்ளார்.
கவர்னர் மாளிகை நோக்கி நாளை அ.தி.மு.க. பிரம்மாண்ட பேரணி நடத்த இருப்பதையொட்டி சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் அதில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்.