
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்து 90,973 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 36,677 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் (மே 22) நிறைவு பெறுகிறது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாகத் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்படக் கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.