
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை (மே 31) வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வருகிறாா்.
பழமையும், வரலாற்று சிறப்புமிக்கதும், அத்திவரதர் புகழ்பெற்றதுமான காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் தேவராஜப்பெருமாள் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளிய பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கருடன் படம் பொறித்த கொடி கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்துக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோயில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.
கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலர் ச. சீனிவாசன், குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், கோயில் கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு பிறகு பெருமாள் தங்கச்சப்பரத்தில் நகரில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவையொட்டி ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான திருவிழா பந்தலும், திருக்கோவில் ராஜகோபுரம் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் இரண்டாம் தேதி கருட சேவை கட்சியும், 6ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் ஜூன் 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி தற்காலிகமாக நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.