
பொது சிவில் சட்டம் குறித்து மத்திய சட்ட வாரியம் பொது மக்களின் கருத்துக் கேட்பு நடத்துகிறது. இது, அண்ணல் அம்பேத்கர் எதிர்பார்ப்பு என்று இந்து முன்னணி வரவேற்றுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், பொது சிவில் சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
நமது நாட்டில் அரசியல் சாசன சட்டத்தை வரையரை படுத்தி தொகுத்த அறிஞர் பெருமக்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வரவே விரும்பினார்கள். ஆனால் மதக்கோட்பாடுகளை அது கட்டுப்படுத்தும் என கருதிய நேரு போன்ற முதுகெலும்பு இல்லாத சிலரின் வற்புறுத்தலின் காரணமாக மதத்திற்கு ஒரு சட்டமாக தற்காலிக ஏற்பாடாக அது அமைந்தது.
இந்த விசித்திரமான போக்கு உலகில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. சட்டத்தில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகளே சட்ட விதியாக இது நாள் வரை இருந்தது நமது நாட்டில் தான்.
குற்றவியல் (கிரிமினல்) சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அதில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்படி இருந்தால் ஆப்கானிஸ்தான் போல கொடூர தண்டனைகள் நடைமுறையில் இருந்தால், அதனை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
ஆனால் இந்திய சிவில் சட்டத்தில் ஏராளமான குளறுபடிகள். திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்து என பலவகையான வழக்குகள் முரண்பாடானதாக தொடர்கிறது.
உதாரணமாக ஆதரவற்ற ஒரு குழந்தையை இந்து மதத்தினர் வளர்த்தாலே அவரது சொத்தில் பங்கு உண்டு. அதே சமயம் கிறித்துவ, முஸ்லிம்கள் சட்டப்படி தத்து எடுத்தாலும் அந்த குழந்தைக்கு சட்டப்படியான உரிமையும் காப்பாளர் அல்லது வளர்ப்பு தந்தை சொத்தில் பங்கும் கிடையாது. அது அனாதையாகவே இருக்கும்.
முஸ்லிமாக இருந்தால் 4 மனைவி வரை திருமணம் செய்வதும் எத்தகைய முரண்பாடு. இதனால் மக்கள் தொகை விகிதாசாரம் அதிகரிக்கும்.இதுபோல் பல சட்டங்களை கூற முடியும்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை அமல்படுத்தும் போது இந்த மத வேறுபாடு தற்காலிமானது. விரைவாக இந்தியர்கள் அனைவருக்குமான சிவில் சட்டம் இயற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தொடர்ந்து பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் மத்திய சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் பற்றி பொது மக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.