தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை..

Published:

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை இன்று நடைபெற்றது மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டம் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுக்களை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டு மறு எண்ணிக்கை பணிகள் நடந்தது. இதற்காக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அறையில் இருந்து 4 பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

அப்போது ஏற்கனவே பதிவு செய்திருந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனர். இந்த வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கியது. இதனை கண்காணிப்பாளர் கண்காணித்து வந்தார்.

ஓட்டு எண்ணிக்கையையொட்டி பழனிநாடார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் பிற வேட்பாளர்களும் வந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன், கோர்ட்டு உத்தரவுப்படி 13 ஏ, 13பி, 13சி ஆகிய மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக செல்வமோகன் தாஸ் பாண்டியன் கூறும் போது, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. மறு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்ட 13 ஏ கவர்கள், 13 பி -வாக்காளர்களின் முழு விவரம், 13 சி-யாருக்கு வாக்களித்தார்கள் என்பதற்கான ஓட்டுச் சீட்டு ஆகிய 3 பேப்பர்களையும் கணக்கில் எடுத்து கொண்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று 13 ‘சி’ சீட்டுகளை மட்டுமே எண்ணப்படுகிறது. தற்போது நான் தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மறு வாக்கு எண்ணிக்கையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img