சென்னை: ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் கலந்து கொள்ள 42 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடந்த கூட்டத்தில், ‘12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிடில் வருகிற மார்ச் 3-ந்தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம், வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீசும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பு, மார்ச் 2-ந்தேதி (அதாவது இன்று) 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழுவினர், நிர்வாக தரப்பினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
Popular Categories



