கான்புர்: காணாமல் போன காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டுபிடித்து தருமாறு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த தில்லி மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு ராகுல் காந்தி விடுமுறையில் சென்றுள்ளார். ராகுல்காந்தியின் அரசியல் விடுமுறை குறித்து மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியிலும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தில்லியில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று விட்டார் என்றும், வேறு மாநிலத்தில் இருக்கி றார் என்றும் செய்திகளும் படங்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உ.பி. மாநில காங்கிரஸின் முன்னாள் பிரமுகரும், அண்மையில் பாரதீய ஜனதாவில் இணைந்தவருமான அமர் வைய்யா என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒட்டியுள்ள போஸ்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமறைவு. அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

