
சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையது இல்லை என்பது மக்களின் கருத்தாகும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் தமிழக அரசின் இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசின் கொள்கை முடிவு அமல்படுத்தவது முடியாது எனக்கூறியுள்ளது. மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்தை முறைப்படியும் மேலும் 50 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீடாக சிறுபான்மையினரைக் கொண்டே நிரப்ப உரிமை உண்டு என்றும், இது நிதி உதவி பெறும் அல்லது நிதி உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது என்பது உறுதிபடுத்தி உள்ளது.
இதேபோன்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நீட் தேர்வு ஏற்கமாட்டோம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அரசின் கொள்கை முடிவை ஏற்க தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையது இல்லை என்பது மக்களின் கருத்தாகும்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் சில சந்தேகங்கள் எழுகின்றன. இந்த வழக்கினை சரியான முறையில் நீதிமன்றம் முன்பு தமிழக அரசு வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
இந்நிலை குறித்து மக்கள் மன்றத்திலும் அரசின் கவனத்திற்கும் நாம் எழுப்பும் சில கேள்விகள்…
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அவர்களுக்காகவே இருக்கையில் அரசின் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை ஒதுக்கீடு ரத்து செய்வது சரியான செயல்பாடு தானே?
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தாராளமாக வழங்கப்படுகிறது. நிதி உதவி வேண்டாம் கட்டண வசூல் மூலம் நடத்திக்கொள்கிறோம் என்று ஏன் சொல்வதில்லை?
சிறுபான்மை நிறுவனங்களில் அரசின் தலையீட்டை தடுக்கவே சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து என்பதை பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது?
மேலும் கிறித்துவ கல்வி நிறுவனங்களில் கிறித்துவ போதனை கட்டாயம் என அந்நிறுவனங்களின் கையேட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இருக்க மற்ற மதத்தினரை சேர்க்க எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது?
மாணவர்களின் மத உரிமை சுதந்திரத்தை நசுக்கி கிறித்துவ மதத்தை திணிப்பதால், கிறித்துவ கல்வி நிறுவனங்களை பொது கல்வி ஸ்தாபனம் என்ற அங்கிகாரம் தருவது அநியாயம் தானே?
திருநெல்வேலியில் ஒரு கிறித்துவ பள்ளியில் இந்து மாணவி குடும்பத்தோடு மதம் மாற வற்புறுத்தப்பட்டதால் அந்த அப்பாவி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு இன்னமும் நிலைமையில் உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிறுவனங்களுக்கு சிறுபான்மை சலுகை அல்லது உரிமை என்பது எத்தகைய ஆபத்தானது என்பதற்கு உதாரணம் சென்னையில் அமெரிக்க சர்ச்சான செவன்ஸ் டே அட்வன்சர் நடத்தும் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றவோ, தேசிய கீதம் பாடுவதோ தடுக்கப்பட்டது என்ற சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது.
இதுபோன்ற நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் மனதில் தேசத்திற்கு எதிரான சித்தாந்த திணிப்பிற்கு உள்ளாகும் அபாயத்தை அரசும் நீதிமன்றமும் உயர்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலனுக்கான கொள்கை முடிவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த முடியாது என்றால் , சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு அரசு நிதி அளிக்கும்போது தனியாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதும் அவசியமற்றது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அந்தந்த மதத்தினரைமட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டும்.
இந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை இந்து முன்னணி சார்பில் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இது குறித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் கருத்துரங்குகள் கல்லூரி மாணவர்களிடம் நடத்தி தங்கள் உரிமைகளை காப்பாற்றி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.