
அயோத்திக்கு தமிழக பாஜக., செலவில் ராமர் கோவில் குடமுழுக்கு கழிந்த 60 நாட்களுக்கு இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்யப் போவதாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று தளங்களாக உருவாகி வரும் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கோவிலைச் சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்ளிட்ட பலவும் அமைய உள்ளன. மூலவர் சந்நிதி விமானம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 2024 ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமானக் குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்த பின் அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கான முழு செலவையும் தமிழக பாஜக., ஏற்கும் என்றும் புதுக்கோட்டையில் என் மண், என் மக்கள் பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.
தனது பயணக் குறிப்புகளை அண்ணாமலை பதிவு செய்திருப்பதில் இருந்து…
இன்றைய #EnMannEnMakkal பயணம், ஆபத்சகாயேஸ்வரர் அருள் புரியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 36 கிராம பகுதிகளின் மையப் பகுதியான கந்தர்வகோட்டை மண்ணில், மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடைபெற்றது. சோழ தேசத்தின் மாபெரும் அடையாளமாகவும், காவல் நகரமாகவும், சோழர்கள் மாபெரும் சனாதன சைவர்களாக இருக்கக் காரணமான ராஜமாதா செம்பியன் மகாதேவியின் கணவர் சிவனருட்செல்வர் கண்டராதித்த சோழனின் பெயரில் அமைந்த கோட்டையே பின்பு கண்டராதித்த சோழ கந்தர்வகோட்டை என்று பரிணமித்தது.
கண்டராதித்த சோழனால் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு கட்டப்பட்ட ஆலயம் கந்தர்வகோட்டையில் உள்ளது. ஆனால், எங்களுக்கு ராமர் யாரென்றே தெரியாது, நாங்கள் ராமரை வணங்கமாட்டோம் என்று கூறுகிறார் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள்.
தொழில்வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒருபுறம் இது பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருக்கிறது. 70 ஆண்டுகளாக ஒரு சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளை இங்கிருந்த ஆட்சியாளர்கள் உதாசீனப்படுத்தியதன் வெளிப்பாடே இது. திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை ஆபத்சகாயேஸ்வரர் தான் காப்பாற்றவேண்டும்.
கந்தர்வகோட்டை உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் ஏக்கருக்கு முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது. காவிரி வைகை குண்டாறு இணைப்பு என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
இந்தியாவையே உலுக்கிய வேங்கைவயல் குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்த தொகுதியில் தான் நடைபெற்றது. 300 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னுமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ‘கொடுமைக்கு ஆளாகக்கூடியவை’ என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ‘அட்டூழியங்கள்’ அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூகநீதி என்று வாய் கிழிய பேசிவிட்டு சமூக அநீதி புரிந்தவர்களுக்கு துணை செல்வது தான் திராவிடமாடல்.
புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நிலக்கரி எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்க, தமிழக பாஜக மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி அவர்களிடம் கோரிக்கை வைத்து இரண்டே நாட்களில் டெல்டா பகுதியில் விடப்பட்ட நிலக்கரி டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு பக்கபலமாக பாஜக என்றும் துணை நிற்கும் என்பதற்கு இந்த நிலக்கரி டெண்டர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, மூன்று வருடத்திற்குப் பிறகு நாடகம் ஆடினர்.
கந்தர்வகோட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்ல புதிய இருப்புப்பாதை வழி, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு காவிரி நதியில் இருந்து துணை வாய்க்கால் வெட்டி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 30 கிராம மக்களின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி, தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்துதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒன்றையும் திமுக நிறைவேற்றவில்லை. இவற்றை நிறைவேற்ற தமிழக பாஜக மக்களுடன் இணைந்து போராடும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை மொத்தமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், புற நானூற்றில் ஒல்லையூர் என்றழைக்கப்பட்ட, பிரகதாம்பாள் அம்மன் குடி கொண்டிருக்கும் புதுக்கோட்டை மண்ணில், மாபெரும் மக்கள் திரள் சூழ சிறப்பாக நடந்தேறியது.
நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், மாண்புமிகு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்கள், தமது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொண்ட மன்னரின் அரண்மனையும், புதுக்கோட்டை மாவட்டமாக உருவாக்கப்பட்ட போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொடுத்த அவருக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்ட 2 ஏக்கர் நிலம் கொடுக்க திமுக அரசு யோசிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அன்று தமிழக பாஜக சார்பில் இதைப் பற்றி ஒரு அறிக்கையை நான் வெளியிட்டிருந்தேன். இதுவரை திமுக பதிலளிக்கவில்லை.
தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. இந்த மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் தொழில்வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை வளர்ச்சியடையாமல் இருக்கிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ 617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்சய சம்பதா திட்டங்கள் மூலம் 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,458 மீனவர்கள், மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. 47,594 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,64,506 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,43,184 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,64,792 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 75,667 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 1,28,995 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2556 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். பாஜக இந்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கும்.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று புதுக்கோட்டை. இதை சரி செய்து, வேலைவாய்ப்புகள் வழங்க இந்த மாவட்டத்தின் இரண்டு திமுக அமைச்சர்கள் ஒன்றுமே செய்யவில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டையில் உழவர் சந்தை அமைக்கப்படும், அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும், புதுக்கோட்டை நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டப்படும், கரம்பக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும், கொள்ளிடம் உபரிநீர் திட்டம் குன்றாண்டார் கோயில் வரை நீட்டிக்கப்படும், ஆலங்குடி கீரமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும், பொன்னமராவதி, ஆலங்குடி, பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கரம்பகுடிக்கு விரிவுபடுத்தப்படும் என்றுக்கூறி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையுமே நிறைவேற்றாத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்கள் தொடர, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுப்போம்.