மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தினை தமிழக அரசு எவ்வளவு மோசமாக கையாண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதே சின்னப்பிள்ளை வெளியிட்ட வீடியோ. அதை பெருமையாக முதல்வர் ஸ்டாலின் சொல்வது அவரையே குற்றம் சொல்லிக் கொள்வது போல் ஆகும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்:
“பத்ம ஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இது வரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். “கவலை வேண்டாம்”! ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்” :- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவதுவது மாநில அரசு தான். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதும் மாநில அரசு தான். அதன்படி பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களின் கவலைக்கு காரணம் உங்கள் அரசு தான் முதல்வர் அவர்களே! அவரின் வேதனைக்கு காரணம் உங்கள் அரசின் சோதனை தான் என்பதை உணருங்கள். இப்போதைய உங்கள் அறிவிப்பையாவது முறையாக செயல்படுத்த முனையுங்கள். தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? – நாராயணன் திருப்பதி.
முன்னதாக, மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில், “இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ‘மகளிர் மேம்பாடு’ எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.
ஆனால், மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்வது குறித்தும், திட்டத்தை பயனாளிகளுக்கு சரிவர சென்றடையாமல் இருப்பது குறித்தும் மாநில அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.