பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார்.
‘மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற பிரசார உத்தியுடன் பாஜக., தமிழகத்தில் பிரதமர் மோடியை அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாதம் 4ம் தேதி (மார்ச் 4) சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அது முழுக்க அரசியல் கூட்டமாகவே நிகழ்ந்தது. அக்கூட்டத்தில், திமுக.,வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று உறுதிபடக் கூறினார். அதற்கு முன்னதாக கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அது முழுக்க அரசு சார்பிலான நிகழ்ச்சியாகவே ந்டைபெற்றது.
அதன் பின்னர் திருநெல்வேலியில் கட்சி சார்பிலான பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். இதை அடுத்து அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தித் தாளில் கொடுத்த விளம்பரத்தில், சீன கொடியுடன் ராக்கெட்டும் அதன் அருகே பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றதால் அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை அடுத்து அந்த கூட்டத்திலும் கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்டார். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தி மேலும் அரசியல் சூட்டை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் 3வது முறையாக வரும் மார்ச் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் அவர் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்திற்கு மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.