நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் ஏப். 4 ஆம் தேதி வரை பெங்களூரு வரை இயக்கப்படும் என்றும், ஏப். 5 ஆம் முதல் மைசூரு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னெள-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, தில்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னெள-பாட்னா, அகமதாபாத்-மும்பை, புரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, நாட்டின் இளைஞர்கள் தங்களுக்கு என்ன மாதிரியான நாடு வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இப்பொழுது ரயில்வே துறை சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டு துவங்கி இரண்டு மாதங்களில், நாங்கள் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.
எனது வாழ்க்கையே ரயில் நிலையத்தில் தான் துவங்கியது. இதனால் ரயில்வே துறை முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளேன்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு அதிக பணம் செலவிட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியில் செலவிட்ட தொகையை விட 6 மடங்கு அதிகம் ஆகும். உலகில் எங்கு வேண்டுமானாலும் நாம் பார்க்கலாம். வளர்ந்த மற்றும் பொருளாதார சக்தியாக மாறிய நாடுகளில் ரயில்வே துறை முக்கியப் பங்காற்றியிருப்பதைக் காணலாம்.
நாங்கள் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் தேர்தல் வெற்றிக்காக அல்ல. தேசத்தின் முன்னேற்றத்திற்காக! என்று பேசினார் பிரதமர் மோடி.