இந்து முன்னணியினரின் இடைவிடாத தொடர் போராட்டத்தால், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, நில ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதற்காக தற்காலிக சர்ச் அமைத்து மத ரீதியாக பிரச்னையை எழுப்பி அரசியல் செய்து வந்தவர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு அருகே கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கோரக்கச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழைமையான அழியாபதீஸ்வரர் கோவில் உள்ளது. .இந்தக் கோவில் முன் தாமிரபரணி ஆற்றை ஒட்டி 70 சென்ட் நிலத்தில் நந்தவனம் இருந்தது.
கருப்பந்துறை ஊராட்சித் தலைவராக இருந்த கிறிஸ்துவரான எல்.தர்மராஜ் என்பவர், நந்தவன நிலத்தை ஆக்கிரமித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை நடத்தி வந்தார். அந்த நிலத்தை மீட்க ஹிந்து முன்னணியினர் பல ஆண்டுகளாகப் போராடியும் முடிவு ஏற்படவில்லை.
இதனால், கோவிலுக்குரிய நில ஆவணங்களுடன் ஹிந்து முன்னணியினர் அறநிலையத்துறையில் புகார் செய்ததை அடுத்து, கோவில் செயல் அலுவலர் ராம்குமார் தலைமையில், அறநிலையத்துறையினர் கோவில் நிலத்தை மீட்டு வேலி அமைத்தனர்.
ஆனால் அதன் பின்னரும்கூட, தர்மராஜ் தலைமையில் ஒரு கும்பல் அந்தக் கற்களை அகற்றி, கட்டடம் கட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை வைத்து, ஹிந்து முன்னணியைச் சேர்ந்த மூன்று பேர் மீது வழக்குகள் பதிவாகின. அதே நேரம், ஹிந்து முன்னணி அளித்த புகாரின் பேரில், தர்மராஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின்படி, உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 39 சென்ட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இவ்வகையில், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
நிலத்தை சட்ட விரோதமாக இத்தனை ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தவர் மீது, அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லையைச் சேர்ந்த வழக்குரைஞரும் இந்து முன்னணி மாநிலச் செயலாளருமான கா.குற்றாலநாதன் கூறிய போது,
“அழியாபதிஸ்வரர் திருவருளால் இந்துமுன்னணி போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. நெல்லை மாநகரம், கருப்பந்துறை அழியாபதிஸ்வரர் திருக்கோவில் முன்பு தர்மராஜ் என்ற கிறிஸ்தவ குடும்பத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட திருக்கோவில் நந்தவன நிலம், இந்துமுன்னணி பலமுறை புகார் கொடுத்து போராட்டம் நடத்திய பின்பு காலை 10 மணிக்கு திருக்கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தற்காலிக சர்ச் மற்றும் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
சட்டப்படி நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை மீட்ட அறநிலையத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெல்லை மாநகர காவல் துறைக்கும் பக்தர்கள் சார்பில் நன்றி. இதற்காக போராடி பல பொய் வழக்குகளை சுமந்து தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு அழியாபுதீஸ்வரர் அருள் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டார்.