பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலையை நிகழ்த்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், அங்கிருந்த தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக 3 மாடிகளைக் கொண்ட வீட்டைக் கட்டி வந்தார். தினமும் வீடு கட்டும் இடத்தில் சேர் போட்டு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். பின்னர் அயனாவரம் வேணுகோபால் தெருவில் தற்போது வசித்து வரும் வீட்டுக்குச் செல்வாராம்.
நேற்று இரவும் வழக்கம் போல புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வந்த போதுதான் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டப்பட்டார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பின் நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்த உளவுத் தகவலும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப் பட்டிருக்கிறார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாக உள்ளது… என்று கூறினார்.
ஆட்டோ ஓட்டுநர் மூலம் உளவு:
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருமலைதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒரு வாரமாக நிறுத்தி, நோட்டமிட்டுள்ளார் திருமலை. ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி, தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு கொலை செய்தனராம். ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறத்தில் இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியதில், ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாகக் கூறப்படுகிறது. வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லவும் தயார் நிலையில் இருந்துள்ளனர். கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகளை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்த பின்னர், திருவள்ளூர் மாவட்டத்திற்குச் சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறையுடன் கூடிய கத்தியை கொலைக் கும்பல் வைத்துள்ளது. குறிப்பாக, நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால், ஆம்ஸ்ட்ராங்கை கொன்று, அந்தக் கத்தியை படத்டில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரே, திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர் சரணடைந்துள்ளார்.
வருகிறார் மாயாவதி:
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.
முதலில் அயனாவரம் இல்லத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்படுகிறது. இதன்பின், செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பிறகு நாளை பிற்பகலில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் 3 முறை எச்சரித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்தும் போலீஸார் மெத்தனமாக இருந்து கோட்டை விட்டனரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.