தமிழகத்தில் தூண்டி விடப்படும் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் மாண்புமிகு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்துமுன்னணி அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு , சட்டவல்லுநர்களின் கருத்துரைகளைப் பெற்று , பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு , நாட்டின் குடியரசுத்தலைவரால் ஒப்புதல் வழங்கப்பெற்ற பின்பு மூன்று சட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் கூட இந்த மூன்று சட்டங்களும் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த புதிய மூன்று சட்டங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக திமுக அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களின் போராட்டத்தை பின்னால் இருந்து தூண்டி வருகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பெருமளவு தேங்கியுள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள் வழக்கு விசாரணை நடைபெறாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது புரியாத புதிராக உள்ளது.
மேலும் வருகிற 10ம் தேதி தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசின் ஆதரவு இருப்பதால் வழக்கறிஞர்களின் ரயில் மறியல் போராட்டம் மிக சுதந்திரமாக எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் சாதாரண பொது மக்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
நாடு முழுவதும் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமக்களை காப்பாற்றும் வல்லமை மாண்புமிகு நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளதாக மக்கள் எதிர்பார்கிறார்கள். வழக்கறிஞர் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் வழக்கறிஞர்கள் பணியிலிருந்து விலகல் என தொடர்ந்து போராடிவரும் நிலையில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத வழக்குகளில் நீதிமன்றங்கள் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதால் வழக்கறிஞர்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் நலன் கருதி நீதிமன்றத்திற்குள் சென்று வழக்கு நடத்த நினைக்கும் வழக்கறிஞர்கள் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டப்பட்டு தடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் பெருமக்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கு பலியாகாமல் நாடு முழுவதும் ஏற்கப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை நாமும் ஏற்று அதற்கு ஏற்ப தயாராகி பணிக்கு திரும்ப வேண்டும் என வழக்கறிஞர் பெருமக்களை இந்துமுன்னணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.
மேலும் மாண்புமிகு உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10நாட்களுக்கு மேலாக முடிவே தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது