வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை, 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இன்று அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் வலுவடைந்து, நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது.
இதற்கு இணையாக, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஏமன் நோக்கி நகர்கிறது.
வளி மண்டல சுழற்சி மற்றும் இரு காற்று இணைவு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்கள்.
புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் நாளை அதி கனமழை பெய்யலாம் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தாலும், அது மெதுவாக நகர்வதால், எதிர்பார்த்ததை விட மிக கனமழை, அதி கனமழை சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
நாளை முதல் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்.
கனமழை எச்சரிக்கை காரணமாக அக்.15, 16, 17ம் தேதிகளில் சென்னையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவ கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும்,, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டது.
திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து
கனமழை அறிவிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக்.15) விடுமுறை அறிவிப்பு.
கனமழை: பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைப்பு!
கனமழை எச்சரிக்கையைடுத்து, சென்னையில் நாளை(அக். 15) நடைபெறவிருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியினை மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை (அக். 15) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக வரும் அக். 21 (திங்கள் கிழமை) அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து.
கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை (15.10.2024) விடுமுறை.
நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று, பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
மீனவர்கள் கவனத்திற்கு!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு