கேரளத்தின் மருத்துவக் கழிவுகள், உணவு இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, அதிக விளைச்சல் இருக்கும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும், தென் தமிழகத்தின் நெல்லை தென்காசி மாவட்டங்களிலும் எல்லையோரப் பகுதிகளில் லாரி லாரியாக கழிவுகளைக் கொண்டு வந்து கேரளம் கொட்டிவிட்டுச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில், கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் தென்தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பாஜக., தலைவர் அண்ணாமலை, இது தொடர்பில் இனி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், கேரளத்தில் சென்று தமிழகத்தின் கழிவுகளைக் கொட்டுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் பதிவு செய்த கருத்து…
காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
கேரள கேன்சர் சிகிச்சை கழிவுகள் திருநெல்வேலியில் மூடை மூடையாக கொட்டப்படுகிறது. தமிழகம் என்ன கேரளத்தின் குப்பைத் தொட்டியா? மக்களின் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கண்டனம் என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் தனியார் மருத்துவமனையின் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா நடுக்கல்லூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
கொட்டப்பட்டுள்ள கழிவுகள் உயிர்க்கொல்லி நோயான கேன்சர் மருத்துவ சிகிச்சையினுடைய மருத்துவ கழிவுகள் என்பது நெல்லை மாவட்ட மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மக்கள் பயன்பாட்டில் உள்ள குளத்தில் இத்தகைய கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்ட மக்களின் மக்களுக்கு தொற்று நோய்க்கிருமிகள் பரவி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குளத்தில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும் இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் .
தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் எல்லாம் கடந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் இருந்து அனைத்து விதமான கழிவுகளும் திருநெல்வேலி தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கொட்டப்பட்டு கேரள மாநிலத்தின் கழிவறையாகவும் குப்பைக் கிடங்காகவும் தமிழக தென் மாவட்டங்கள் மாறி உள்ளது.
கேரளாவில் உள்ள மிருகக் கழிவுகளும் மின்னணு கழிவுகளும் பல்வேறு விதமான மருத்துவக் கழிவுகளும் நெல்லை தென்காசி குமரி மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகிறது. இப்போது உயிர்கொல்லி நோயான கேன்சர் மருத்துவ சிகிச்சை கழிவுகளும் கொட்டப்பட்டிருப்தால் கொரானா போன்ற தொற்று நோய் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமானது நெல்லை மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள மணல் மற்றும் கல் போன்ற கனிம வளங்கள் அரிசி போன்ற உணவுப் பொருட்கள் எல்லாம் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் இங்கே வந்து கொட்டப்படுகிறது இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தென் மாவட்ட மக்கள் மீது தமிழக அரசு எந்த அளவிற்கு மெத்தனப் போக்கோடு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது
கேரளாவில் சென்று ஈவேராவுக்கு வைக்கம் விழா எடுத்து அரசியல் நடத்துவதில் தான் திராவிட மாடல் அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர மக்களின் உயிரை காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை
தென் தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பு சுகாதாரம் குறித்து தமிழக அரசுக்கோ நெல்லை தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த கவலையும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகள் , தமிழக மக்கள் உயிரோடு விளையாடும் கேரள கம்யூனிச அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாமல் வாய் மூடி வேடிக்கை பார்த்து அரசியல் செய்யும் மக்கள் விரோத போக்கையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது ஓரிரு சம்பவங்கள் மூலமாக சொல்லப்படுவது அல்ல தொடர்ந்து கேரள மாநிலத்தின் கழிவுகள் தென் மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
தமிழக எல்லையில் சோதனை சாவடிகளில் இந்த கழிவு வாகனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது சோதனை சாவடிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியாக்கி உள்ளது. இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து இங்கே கொட்டும் நபர்கள் மீதும் அதன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் தமிழகத்தில் எந்த கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியர் கலெக்டர்களின் மெத்தனப் போக்கினால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
இனியாவது தமிழக அரசு தென் மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு தென் தமிழகத்தை கேரளாவின் குப்பை கிடங்காக மாற்றி வரும் கேரள அரசு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்து அழித்து தென் மாவட்ட மக்களின் உயிரை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது
இனியும் இதுபோன்று ஒரு நிகழ்வு ஏற்பட்டால் தென் மாவட்ட மக்களை ஒன்று திரட்டி இந்துமுன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது