![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2024/11/aus-vs-india.jpg?resize=696%2C392&ssl=1)
இந்தியா – ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் – காபா மைதானம், பிரிஸ்பேன் – முதல் நான்கு நாள்கள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி (முதல் இன்னிங்க்ஸ் 117.1 ஓவரில் 445 ரன், ட்ராவிஸ் ஹெட் 152, ஸ்டீவன் ஸ்மித் 101, அலக்ஸ் கேரி 70, பும்ரா 6/76, சிராஜ் 2/97, ஆகாஷ் தீப் 1/95) இந்திய அணி (முதல் இன்னிக்ஸ் 74.5 ஓவர்களில் 252/9, கே.எல். ராகுல் 84, ரவீந்தர் ஜதேஜா 77, ஆகாஷ் தீப் ஆட்டமிழக்காமல் 27, பேட் கம்மின்ஸ் 4/80, மிட்சல் ஸ்டார்க் 3/83, ஹேசல் வுட் 1/22, நாதன் லியான் 1/54)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு டெஸ்டில் வென்றிருக்கின்றன. அந்த நிலையில் மூன்றாவது போட்டி பிரிஸ்பேன், காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, கில் 1, விராட் கோலி 3, ரிஷப் பண்ட் 9, கேப்டன் ரோஹித் 10 ரன்களில் அவுட்டாகி மெகா ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 74-5 என திணறிய இந்திய அணிக்கு ஒரு புறம் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஜடேஜாவுடன் சேர்ந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் கடுமையாக போராடி 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டி போராடி 16 (16) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடிய ஜடேஜா அரை சதமடித்தார். ஆனால் முக்கிய நேரத்தில் 77 ரன்களில் அவர் அவுட்டானதால் 1 விக்கெட்டை மட்டுமே வைத்திருந்த இந்தியா ஃபாலோ ஆன் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அப்படி நடந்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் காபா பிட்ச்சில் ஐந்தாவது நாள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பதுடன் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து ரசிகர்கள் வேதனையில் உள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் ஆகியோர் மிகவும் தில்லாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் ஆகாஷ் தீப் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27* (31 பந்துகள்), பும்ரா 1 சிக்ஸருடன் 10* (27 பந்துகள்) ரன்கள் எடுத்து 39* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆனை தவிர்த்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார்கள். அதை கம்பீர் ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் உடைமாற்றும் அறை அருகில் இருந்து கொண்டாடினார்கள். இறுதியில் நிறைவுக்கு வந்த நான்காவது நாள் முடிவில் 252-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளது.
முதல் நான்கு நாள்களிலும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. ஐந்தாவது நாளில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படியே மழை வழி விட்டாலும் இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது தவறை உணர்ந்து விளையாடி தோல்வியை தவிர்க்க பிரகாச வாய்ப்புள்ளது. அப்படி தோல்வியை தவிர்த்தால் கடைசி 2 போட்டிகளில் நன்றாக விளையாடும் பட்சத்தில் இந்தத் தொடரையே இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு உருவாகும்.