December 5, 2025, 11:25 AM
26.3 C
Chennai

இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு: தமிழகத்தில் ஒரு கும்பமேளா! 

madurai murugan manadu1 - 2025

சாதனை மாநாடு! சாதித்த இந்து முன்னணி! திரட்டிய முருகன்! மிரட்டிய மாநாடு! திரண்ட பக்தர்கள்! அரண்ட நாத்திகம்!  – இப்படி விதவிதமாக போற்றி சிறப்பிக்கும் வகையில் அமைந்துவிட்டது, மதுரையில் இந்து முன்னணி அமைப்பு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு.  

தமிழக வரலாற்றில் இப்படி ஒரு ஆன்மிக மாநாடு நடந்திருக்குமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது, மதுரையில் 2025 ஜூன் 22ம் தேதி  இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு! 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இந்த மாநாட்டுக்கு திட்டமிட்டவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், மாநாட்டுத் திடலுக்குள் வர இயலாமல் வெளியிலேயே தங்கிப் போனவர்கள் லட்சக்கணக்கில்! எதனால் இந்தத் தன்னெழுச்சி? ஏன் இப்படி ஒரு மாநாடு? கோயில்கள் பல இருக்கும் போது, அவற்றுக்கும் பக்தர்கள் பலர் திரளாகச் சென்று கொண்டிருக்கும் போது, முருகப் பெருமான் பெயரில் பொதுவான ஓர் இடத்தில் இப்படி ஒரு மாநாட்டுக்குத் திட்டமிட வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? கேள்விகள் பல கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் நாத்திகத்தில் தோய்ந்து போனவர்கள்! ஆனால் இந்த மாநாட்டுக்கான மூலகாரணம், அவர்களும் அவர்களின் ஆத்திக விரோத செயல்பாடுகளுமே என்பதை இந்த மாநாட்டில் கூடியவர்கள் புரியவைத்தார்கள்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்களில் நிலவும் ஊழல்கள், அரசுத் துறையே நடத்தும் கொள்ளை, பக்தி மேலீட்டால் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களைச் சுரண்டும் போக்கு, இப்படியே பார்த்துப் பார்த்து விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆன்மிக மனங்களின் வடிகாலாகத்தான் இந்தத் தன்னெழுச்சிக் கூட்டத்தைக் காண முடிந்தது. குறிப்பாக, எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய தமிழக அரசு காட்டும் பாரபட்சமான போக்குதான் இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை முருகன் கோயிலுக்கு ஏற்பட்ட பிரச்னை முருக பக்தர்களை பெரிதும் சீண்டிப் பார்த்தது. வாக்குவங்கி அரசியலுக்காக அரசு சோடை போனபோது, சென்னிமலையைக் காப்போம் என 2023 அக்டோபரில் ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். தொடர்ந்து பழனி, திருச்செந்தூர் என முருகன் தலங்களில் பிரச்னைகள். முத்தாய்ப்பாக முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மதரீதியாக ஏற்படுத்தப்பட்ட பெரும் பிரச்னை, அதற்காக இந்து முன்னணி முன்னெடுத்த போராட்டமும் திரண்ட மக்களும் தான் இந்த வெற்றிகரமான மதுரை மாநாட்டுக்கு திட்டமிட வைத்துள்ளது. 

முருகப் பெருமானின் தலங்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் 5 லட்சம் பேரைத் திரட்டி கந்த சஷ்டி கவசம் பாடுவோம் என்று திட்டமிட்ட இந்து முன்னணியின் அறிவிப்பு, மேலும் மெருகேற்றப்பட்டு, பல தலங்களிலும் பூஜிக்கப்பட்ட வேல்களைக் கொண்டு வந்து வழிபாடு செய்வது, லட்சக்கணக்கில் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாடுவது, முருகனின் புகழ்பாடும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, மக்களுக்கு ஆசிகளை வழங்க ஆதினங்கள் உள்ளிட்ட பெரியோர்களை மேடையில் அமர்த்துவது, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தகுந்த சமூகப் பேச்சாளர்களை முன்னிறுத்துவது என நீண்டிருக்கிறது. அந்த வகையில், இந்து முன்னணியின் திட்டமிடல் பெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது.  

இப்படி ஒரு மாநாடு நடக்கக் கூடாது என, அரசுத் துறைகளும் நாத்திக அரசியல் கட்சிகளும் அவதூறுகளைப் பரப்பி, எல்லா வகையிலும் தடைகளை உருவாக்கினார்கள். வழக்கம் போல் நீதிமன்றம் சென்று பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு  பல இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள். மின் தடை ஏற்படுத்தி மதுரை சாலைகளை இருட்டாக்கியது நிர்வாகம். பல்வேறு ஊர்களிலும் இருந்து வ்நத வாகங்களை மறித்து, சோதனை என்ற பெயரில் காவல் துறை வேண்டுமென்றே தேக்கியது. நேரத்துக்குச் செல்ல முடியாதபடி தடைகளை ஏற்படுத்தியும் கூட  முருக பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்! 

madurai murugan manadu crowd - 2025

வாகனங்களுக்கு அந்த அந்த மாவட்டங்களில் பாஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்து, பின்னர் பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன. 

இந்த மாநாட்டில் பங்கேற்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உ.பி. முதல்வர் ஏதோ காரணத்தால் வர இயலாமல் போக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கம்பீரமாகக் கலந்து கொண்டு, அழகுத் தமிழில் தனக்கே உரிய பாணியில் உரையாற்றி மாநாட்டுக்கு உரம் ஏற்றினார். 

மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் நடந்த இந்த மாநாட்டை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இவற்றை நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசித்தார்கள். மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போல் வடிவமைக்கப்பட்டது. 

மேள தாளங்களுடன் ஆடிப்பாடி குழுவாக வந்தவர்கள், கந்த சஷ்டி கவசத்தை பாடிய வண்ணம் இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடக்கத்தில் சிறுவன் சூரிய நாராயணன் வேலுண்டு வினையில்லை பாடலை உருக்கமாகப் பாடி கவனம் ஈர்த்தார். 

madurai murugan manadu crowd2 - 2025

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பாஜக., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ., அதிமுக., தலைவர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, ஆகியோருடன், ஆதீனங்கள், சன்யாசிகள், முருகனடியார்கள், சிவ பக்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

madurai manadu - 2025

பச்சை வேட்டி, துண்டுடன் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மேடை ஏறினார். திருத்தணி கோவிலில் வைத்து வழிபட்ட வேல் அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. மாநாட்டில் பேசிய பவன் கல்யாண்,  “மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், 6-வது படை வீடும் மதுரையில்தான் உள்ளன. மதுரை என்பது மீனாட்சி அம்மன் பட்டணம். மீனாட்சி அம்மன் பார்வதியின் அம்சம். எனவே முருகனின் தாயாரும், மதுரையில்தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில்தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில்தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் முருகனின் அவதாரமாகவே கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதராக வாழ்ந்தார். எனவே தேவரை பணிந்து வணங்குகிறேன்.

இப்போது நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகிறோம், தரிசனம் செய்கிறோம், குங்குமம் பெறுகிறோம். ஆனால் ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி தரும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருள் சூழ்ந்திருந்தது. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில், குங்குமம் கொடுக்க ஆள் இல்லை. 60 வருடங்களாக அங்கு விளக்குகள் இல்லை.கோவில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். அதன் பின்னர் 14-ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார், விஜயநகர இளவரசர் குமார கம்பணன். நமது நாட்டில் நம்பிக்கைக்கு அழிவில்லை என்பதும், அதனை யாராலும் அழிக்க முடியாது என்பதும் நமக்குத் தெரிந்தது. 

நமது கலாசாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக உள்ளது. நமது கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தீமைகள் சூழும்போது அதை அறுப்பதுதான் அறம். அதுதான் புரட்சி. அதை செய்பவர்கள்தான் புரட்சித் தலைவர்கள். உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப் பெருமான். அநீதியை அழித்ததால், அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சித் தலைவர். முருகன் மாநாட்டை தமிழகத்தில் ஏன் நடத்துகிறீர்கள் என்று ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். உத்தர பிரதேசம், குஜராத்தில் நடத்த வேண்டியதுதானே என்கின்றனர். இன்று முருகனை பார்த்து இப்படி கேட்கிறார்கள். நாளை சிவபெருமானை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிகவும் ஆபத்தானது. 

இந்துக்கள் அமைதியானவர்கள், பண்பானவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்வதராக இருக்கலாம். ஒரு முஸ்லிம், முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சினை. ஒருவன், இந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி என்பது அவர்களின் போலி முகமாக உள்ளது. என் நம்பிக்கையைக் கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனைக் கேட்க நீங்கள் யார்?.என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா… – என்று பேசி உணர்வூட்டினார் பவன் கல்யாண்.

நயினார் நாகேந்திரன் பேசியபோது, “முருகனுக்கு உருகாதார் யாரும் இல்லை. முருகா என்ற பெயரில் 3 வேதங்களும், முக்கடவுள்களும் அடங்கி இருக்கிறார்கள். நமது வாழ்வியலை இங்கே காண முடிகிறது. தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்தும் ஒருமித்த கருத்துகளை கொண்டவை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலமாக சொர்க்கபுரியில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று பேசி, ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். அன்பர்கள் அதை வெகுவாக ரசித்தார்கள்.

அண்ணாமலை வழக்கம் போல் சரவெடியாகப் பேசினார்.  “நம்  முன்னோர்கள் கலாசாரம், பண்பாடு, கோவில்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய வாழ்வியல் முறையை பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்தனர். அவர்களைப் போல நாமும் அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை நாம் ஒரு கொள்கையாகவே இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்துவுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம். இந்தப் பாகுபாடு எதற்காக என்று கேட்கவும் நாம் கூடியுள்ளோம். இந்த மாநாடு அரசியல் நோக்கத்திற்கானதல்ல. நமது வாழ்வியலை மீட்டு எடுத்து உள்ளது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இனி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன்பு, பின்பு என்றுதான் அரசியல், வரலாறு இருக்கும்” என்று பேசினார். 

ஆர்எஸ்எஸ்., தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் பேசியபோது, “இது தமிழகத்தில் ஹிந்து சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் எழுச்சி மாநாடு. இம்மாநாடு வெற்றிக்கு காரணம் ஒற்றுமை. ஹிந்து சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். ஹிந்துவின் எழுச்சி தேசியத்தின் எழுச்சி. ஹிந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காக 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ்., உலகம் முழுதும் ஒரே குடும்பமாக போற்றிய சமூகம் நம் சமூகம். பல உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டது. எல்லாப் பெண்களையும் தாயாகப் போற்றுவதும், பிறர் செல்வங்களை மண்ணுக்கு சமமாக கருதுவதும் நம் தர்மம். தீண்டாமை ஒரு பாவம் என்பது ஆர்எஸ்எஸ்., கோட்பாடு. கோயில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள தீண்டாமையை வேருடன் அழிக்க வேண்டும். இந்த மாநாடு அத்தகைய மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று பேசினார்.

இந்து என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து செல்லுவோம் என்று தொடங்கிய இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன், லட்சக்கணக்கானோர் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியை பார்த்து ராமகோபாலன் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்து ஆசீர்வதித்து கொண்டிருப்பார்கள். மதுரையில் எதற்கு இந்த மாநாடு என்று கேட்டார்கள். இந்த மதுரை மண் கடவுள் பிறந்து விளையாடி திருமணம் செய்து மீனாட்சியாக ஆட்சி செய்யும் மண் இந்த மதுரை மண். இந்த மதுரையில் மாநாடு நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது? அவர்கள் விமர்சிப்பது போல் இது சங்கிகள் மாநாடு தான். எப்படி? தமிழுக்கு சங்கம் வைத்து தலைவனாக இருந்த சிவபெருமானும் முருகனும் தான் முதல் சங்கிகள். அவர்கள் வழியை பின்பற்றி நாமும் சங்கிகள் தான். சிவனை நோக்கி தவம் செய்த இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் அகஸ்தியர் அவர் சிவபெருமானின் சொல்கேட்டு தென்னகம் வந்து தமிழை வளர்த்து இலக்கணம் அமைத்தார். சூரபத்மனும் சிவனை வணங்கி வரம் பெற்றார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் மக்களை கொடுமைப்படுத்தினான். மக்கள் சிரமப்பட்டார்கள் தேவர்கள் இடம் முறையிட்டார்கள் அவர்களுக்காக முருகப்பெருமான் வந்தார் சூரசம்ஹாரம் செய்தார் தர்மம் என்றது. அதுபோல் மக்கள் சக்தி திரண்டால் இந்த நாட்டுக்கு ஒரு தீர்வு வரும். தமிழகத்தில் பக்தி இருக்கிறது ஆனால் சக்தி இல்லை அந்த சக்தியை நாம் வெளிப்படுத்தவே இன்று அனைவரும் சேர்ந்து சஷ்டி கவசம் சொல்கிறோம். என்று பேசினார்.

இந்த மாநாட்டில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதன் புனிதத்தையும், மலையையும் காத்திட வேண்டும், ஆன்மிகம் சம்பந்தம் இல்லாத விஷயங்களுக்கு கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது, இந்துக்களையும், இந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதியையும், அரசியல் கட்சிகளையும் தேர்தல்களில் மக்கள் புறக்கணிக்க வேண்டும், முருக பக்தர்கள் சஷ்டி தோறும் முருகன் சந்நிதியில் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்’ ஆகியன உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்றனர். ‘நான் இந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்துக்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். பாரத தேசத்தையும், இந்து சமுதாயத்தையும், நமது வழிபாட்டு தலங்களையும் பெரிதும் நேசிக்கிறேன். எனது இந்து மதத்தை நான் பாதுகாப்பேன். அதை பிறர் இழிவு செய்தால், தட்டிக்கேட்பதை எனது கடமையாகக் கொள்வேன். எனது குடும்பம் முன்மாதிரி இந்து குடும்பமாக திகழ பாடுபடுவேன். நான் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றம் நடைபெறாமல் தடுக்க பாடுபடுவேன். மதம் மாறி சென்றவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப செய்வேன். ‘நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற உணர்வுடன் ஆலயங்களை பாதுகாப்போம் என முருகப் பெருமானை மனதார வேண்டி உறுதி ஏற்கிறேன் – என அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.

நிகழ்வின் நிறைவாக மாநாட்டு மேடை யில் இருந்தவர்களும், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும் என லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி ஒரு கின்னஸ் சாதனையைச் செய்தனர்.  எல்இடி திரையில் இசையுடன் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க, அரங்கில் திரண்டிருந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் இணைந்து பக்தி பரவசத்துடன் பாடினர். மேடையில் இருந்த பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தரையில் அமர்ந்து பாடினர்.

கந்த சஷ்டி கவசம் பாடி முடித்த பிறகு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த அறுபடை வீடுகளுக்கும், நடுவில் இருந்த பிரம்மாண்ட முருகன் சிலைக்கும் கைலாய வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் மாநாடு நிறைவுற்று அனைவரும் திரும்பினர். 

madurai murugan manadu3 - 2025

ஏற்பாடுகள்:

அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16ல் திறக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாடு நடைபெறும் பகுதியில் பக்தர்களை வழிநடத்த, இந்து முன்னணி சார்பில் பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், மருத்துவம், ஊடகம், இதர பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 27 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 100 பேர் என, 2,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த மாவட்ட வாரியாக, 81 தன்னார்வலர்கள் குழுவும், 25 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவும் தனியாக நியமிக்கப்பட்டது. அவசர மருத்துவ தேவை ஏற்படுவோருக்கு மருத்துவ உதவி வழங்க 13 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாட்டு நுழைவாயில் முதல், மாநாடு நடைபெறும் பகுதி வரை ஒவ்வொரு 20 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் வழிகாட்ட நிறுத்தப்பட்டார்.

மதுரை ராம் பிரசாத் தலைமையில் மிகச்சிறந்த மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த தென்பாரத அமைப்பாளர் க. பக்தன், மாநில அமைப்பாளர் பாலாஜி உள்ளிட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அனைவரும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். 

மாநாட்டு நிறைவில், வந்திருந்தவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை அவர்களே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்தனர். அங்கே இருந்த தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து இடத்தை தூய்மைப் படுத்தினர். மாநாடு நிறைவுற்ற பின், அறுபடை வீடு அமைப்பைப் பார்க்க மேடை ஏறியவர்களை, ‘இவ்வாறு கூட்டமாக ஏற வேண்டாம், மேடை தாங்காது’ என்று விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று அமைதி காத்து அனைவரும் ஒத்துழைத்தனர். இந்து முன்னணி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களே கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். அவர்களின் வழிகாட்டலை ஏற்று எந்த அசம்பாவிதமும் இன்றி லட்சக்கணக்கானோர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது தமிழகத்தில் ஒரு கும்பமேளாவை நினைவூட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories