1000786195 - 2026

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன உற்சவம் துவக்கம்..

சற்றுமுன்

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

1000786195 - 2026

இந்திய நாட்டில் பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் இன்று  திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம்10 நாட்கள் நடைபெறுகிறது.

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்  சித்ரசபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில்  உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவசைலாஸ் தீட்சிதர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் பசுக் கொடியை ஏற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.

ஜூன் 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 30-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்ழமை தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.