
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
நாளை 9.7.25 அன்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டது. ஒருதலைப்பட்சமானது. இதனை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம்போல நமது சேவை தொடரும்.
இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக விலைபோனது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக சீர்கேடு குறித்து இவர்கள் பேசியதில்லை. போக்குவரத்து, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை என பல துறைகளும் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால், மலிவான அரசியலால் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. எந்த பெரிய தொழில் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் படித்த மாணவர்களுக்கு எந்த எதிர்காலம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளது. உள்கட்டமைப்பு மிகவும் பலகீனமாக உள்ளது.
மேலும் வருகின்ற தேர்தலை கணக்கில் கொண்டு, வெற்று அரசியல் காரணங்களுக்காக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி தேசியத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக மக்களை திசைத்திருப்ப தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தொழில், சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது தனித்து இயங்குவது, அதில் எல்லா மாநில நிதி அமைச்சர்கள் நிதி செயலாளர்கள் இடம்பெறுகிறார்கள். இவர்கள் கொண்டு வரும் கருத்துகள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பரிந்துரைக்கலாமே? அது குறித்து இந்த கம்யூனிஸ்ட்கள் ஏன் பேசுவதில்லை.
கம்யூனிஸ்ட்கள் தந்திரமானவர்கள், அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கான காரணங்களில் ஒன்றில் கூட தமிழக மாநில அரசின் செயல்பாடு குறித்து எந்த விமர்சனங்களும் இல்லை.
தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடுகிறார்கள். தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆட்டோ கட்டணம் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆட்டோ தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு வாரியம் செய்ய வேண்டிய நல திட்டங்கள் குறித்து இதில் வலியுறுத்தவில்லை. மாறிவரும் சூழலால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டவில்லை.
எனவே, இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள். வருகின்ற தேர்தலில் மக்களை திசைத்திருப்பி அரசியல் லாபம் பெற தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை தொழிலாளர்கள் உணர வேண்டும். இந்த தேவையற்ற வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நாளை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மக்களுக்கான சேவை தொடரும். அதற்கு தக்க பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள், காவல்துறையினர் உறுதிபடுத்த வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி இந்து ஆட்டோ முன்னணி சங்கம் செயல்படும், அதற்கு மக்களின் நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.





