
பக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனக் கட்டணத்தில் முறைகேடு நடப்பதால், பக்தர்கள் அவதிப்படுவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால்
தொடர்ந்து அந்த கோவிலில் பக்தர்கள் அவமதிக்கப்படும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இன்று சுவாமி தரிசனம் செய்ய இரு பக்தர்கள் சென்றுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் அவர்களிடம் நானூறு ரூபாய் கொடுத்தால் தான் டிக்கெட் தர முடியும் என்று கோவில் பெண் ஊழியர் ஒருவர் கோபமாக பேசுகிறார். அப்பொழுது பக்தர் இரண்டு பேருக்கு எதற்கு 400 ரூபாய் தர வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். இதனால் கோபம் அடைந்த பெண் ஊழியர் பக்தரை ஒருமையில் பேசி 400 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தால் எடுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல்
கோவில் ஊழியர் பேசியதை வீடியோ எடுத்த பக்தரிடம்
இதைக் கொண்டு போய் கலெக்டரிடம் காண்பியுங்கள்.
20 வருடமாக நான் இந்த கோவிலில் வேலை செய்கிறேன்.
எத்தனையோ பேரை பார்த்து விட்டேன். என்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என பேசுகிறார்.
கோவில் பெண் ஊழியர் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களில் இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருவது பக்தர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
சாமியை தரிசனம் செய்ய தரிசன கட்டணம் வசூலிப்பதையே அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து நிற்கும் வேளையில்
இரண்டு மடங்காக கட்டண தரிசனத்தை வசூல் செய்வது என்பது அராஜகத்தின் உச்சம்.
பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது. மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயலாகும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்வவதற்கு கோவில் ஊழியருக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் செய்ய வேண்டிய அறநிலையத்துறை
ரவுடிகள் போல் பக்தர்களை மிரட்டும் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களிடமும் பணம் சுரண்டும் சம்பவங்கள் இந்த கோவிலில் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்களை தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.
கோவில் ஊழியர் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது நிச்சயமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். இவர்களின் சம்மதத்தோடு தான் கட்டண கொள்ளையில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நிர்ணிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மேலாக வசூல் செய்யும் பணத்தில் இவர்களுக்கும் பங்கு பிரித்து தருவதால் தான் எந்த விதமான அச்சமும் இன்றி பெண் ஊழியர் பக்தர்களை அவமதித்து பேசுகிறார்.
400 ரூபாய் கட்டணம் கொடுத்தால் கோவிலுக்கு உள்ளே வாருங்கள் இல்லையேல் வெளியே செல்லுங்கள் என்கின்ற ஆணவப் பேச்சின் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
திராவிட மாடல் ஆட்சியில் இறைவனே மகிழ்ச்சியாக உள்ளான் என மார் தட்டிக் கொள்ளும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சமயபுரம் கோவில் பிரச்சனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.
இரு மடங்கு கட்டணம் வசூலித்ததோடு பக்தர்களை அவமதிப்பிற்கு உள்ளாகிய கோவில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்
சமயபுரம் மாரியம்மன் கோவில் மட்டுமல்லாது தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்த கோவிலிலும் இது போன்ற ஊழல்களும்
பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் இந்து முன்னணியின் வலியுறுத்துகிறது.





