
தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
விஜயதசமி மற்றும் தொடர்ந்து வந்த பூஜை விடுமுறைகளை. முன்னிட்டு, தாம்பரம் செங்கோட்டை இடையே ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. செங்கோட்டையில் இருந்து பூஜை விடுமுறை முடிந்து சென்ற வழக்கமான பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பொதுப் பெட்டிகளில் பயணிக்க, செங்கோட்டை ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த ஞாயிறு அன்று 1750 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தீபாவளிக்கு தாம்பரம் செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் , ஏனைய தலைமையக அதிகாரிகள், மதுரை திருச்சி சென்னை கோட்ட மேலாளர்கள், மதுரை விருதுநகர் தென்காசி நாடளுமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் , ஒலிபரப்புதுறை அமைச்சர் முருகன், ரயில்வே வாரிய தலைவர், பாஜக டில்லி தலைவர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் ஐயாசாமி, தமிழக பாஜக தலைமையக நிர்வாகிகள் ஆகியோருக்கு தாம்பரம் செங்கோட்டை & தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி கால பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு 18/10/25 சனிக்கிழமை மாலை புறப்பட்டு விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருத்தங்கல் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் பாம்புகோவில் சந்தை கடையநல்லூர் தென்காசி வழியாக 19/10/25 ஞாயிறு காலை செங்கோட்டைக்கு வர வேண்டும்.
மறு மார்க்கத்தில் 20.10.25 திங்கள்கிழமை மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு 21/10/25 செவ்வாய் காலை தாம்பரத்தை அடைய வேண்டும். குறைந்த அளவு ரயில்களே சென்னைக்கு இயக்கப்படும் செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தட பயணிகள் இந்த தீபாவளி சிறப்பு ரயில்களின் இயக்கத்தால் பெரிதும் பயனடைவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.





