
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ள சம்பவம் பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னதி, கூரை மற்றும் துவாரபாலகர் சிலைகள் போன்ற அம்சங்கள் மிக பழமையானவை. கோயிலை பாதுகாக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உள்ளது. 1990 ல் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா பல கோயில்களுக்கு நன்கொடை வழங்கினார். செப்டம்பர் 1998ல் சபரிமலை கோயிலின் சன்னதி, கூரை மற்றும் இரண்டு துவாரபாலகர் சிலைகளை தங்கம் மற்றும் செம்பால் அமைக்கும் பணிக்காக 31 கிலோ தங்கம் கொடுத்தார். அதனுடன் 1,900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கப்பட்டது. விஜய் மல்லையா கொடுத்த தங்கம் மற்றும் செம்பு சேர்த்து கோயிலின் கூரையும் புனரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலை கோயில் தங்கம் மற்றும் நகை பராமரிப்பு சமீபத்தில் சர்ச்சைகளுக்கு ஆளானது. 2019ல் தங்க நன்கொடைகள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2021 வரை கோயிலின் நகை பற்றிய விரிவான கணக்கு பதிவுகள் இல்லாமல், பொட்டலங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இது பல விதமான மோசடிக்கு வழி வகுக்கும் என அப்போதே நிபுணர்கள் எச்சரித்தனர். அவர்கள் சொன்னது போலவே சபரிமலை கோயில் நகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது
சபரிமலை ஐய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது.

இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.
இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:
சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது.
உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது.கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க கவசங்கள் மீண்டும் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை சிறப்பு கமிஷனரின் அனுமதியின்றி அந்த கவசங்கள் கழற்றப் பட்டதாக கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இதை நீதிமன்றம் விசாரித்தபோது தான், கடைசியாக 2019ல் கவசத்தை கழற்றியபோது, அதில் இருந்து 4.54 கிலோவுக்கு தங்கம் மாயமான விஷயம் அம்பலமானது.தவிர, காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது.
தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேவசம் போர்டு தலைவராக நான் பதவி வகித்தபோது, கவசங்களை செப்பனிடுவதற்காக கழற்றவில்லை. மேலும், துவாரபாலகர்கள் சிலைகளில் அந்த கவசங்கள் முறையாக பொருத்தப்பட்டதா? அதில் இருந்த தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டதா? என ஆராய்வதற்கும் அவசியம் ஏற்படவில்லை. என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவசம் போர்டு வெளியிட்ட அறிக்கை: சபரிமலையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த முராரி பாபு, மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார். தங்கமுலாம் பூசப்பட்ட துவாரபாலகர்கள் கவசங்களில் இருப்பது செப்புத்தகடுகள் என, 2019, ஜூலை 17ல் சபரிமலை செயல் அதிகாரியிடம் அறிக்கை அளித்திருக்கிறார். இது பெரும் தவறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து முராரி பாபு கூறியதாவது: கோவில் தந்திரியின் கருத்தை கேட்ட பிறகே, அப்போது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தேன். அது செப்பு தகடு தான் என எழுதினேன். ஏனெனில் அது முழுமையான செப்பு தகடாக இருந்தது. அதன் காரணமாகவே தங்கமுலாம் பூச கழற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு கவசங்களை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொ டையாக வழங்கினார். இந்த தங்க கவசத்தை பழுது பார்த்து, ‘எலக்ட்ரோ பிளேட்டிங்’ செய்ய, சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுப்பி வைத்தது. அப்போது தேவசம் போர்டு ஆணையரின் அனுமதியின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதே நேரம், தங்க கவசத்தின் எடை 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், துவாரபாலகர்களின் தங்க பீடமும் மாயமானதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேவசம் போர்டின் ஊழல் தடுப்பு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நன்கொடை அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புக் குழு, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடத்தை, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்டது.
பழுது பார்த்த பின், பீடம் சரியாக பொருந்தாததால், மீண்டும் தேவசம் போர்டு தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த விவகாரத்தை தான் மறந்து போனதாகவும் உன்னிகிருஷ்ணன் போத்தி விளக்கம் அளித்திருந்தார்.
இது தொடர்பாக இரண்டு நாட்கள் வரை உன்னிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தேவசம் போர்டு ஊழல் தடுப்புக் குழு, கேரள உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதை தொடர்ந்து துவாரபாலகர்கள் சிலையில் அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்தது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது.
எஸ்.பி., சசிதரன் தலைமையில், ஏ.டி.ஜி.பி., வெங்கடேஷ் மேற்பார்வையில், இக்குழு செயலாற்றும் எனவும் அறிவித்துள்ளது. சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். கேரள உயர் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு உலகளவில் ஐயப்ப பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.





