
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M5 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
பழைய GSAT-7 தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்ததால், அதற்கு மாற்றாக இந்த CMS-03 செயல்படும். இது GSAT-7R என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கடல்சார் தகவல் தொடர்பு திறன்களை இது பெருமளவில் மேம்படுத்தும். குறிப்பாக, இந்திய கடற்படையின் செயல்பாடுகளுக்கு உதவும். அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பான இணைப்புகளை வழங்கவும் இது உதவ உள்ளது.
பாரதத்தின் மிகப்பெரிய செயற்கைக்கோள்
பாரதத்தின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் நவ.2 ஞாயிறு மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நவ.1 மாலை தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நவ.2 மாலை 5.26 மணிக்கு எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதன்பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியபோது…
சிஎம்எஸ் -03 செயற்கைக்கோள் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட பாதையில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளித்திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும், இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல்பிராந்தியங்களை கண்காணிக்கவும் பயன்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தன்னிறைவு இந்தியாவுக்கு மற்றுமொரு உதாரணமாக உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
செயற்கைக்கோள் ஏவப்படும் வரையில் பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான நேரங்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். பருவநிலை நமக்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இதனை நாம் சவாலாக எடுத்துக் கொண்டதுடன் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளித்து, மோசமான வானிலை நிலவிய போதும், செயற்கைக்கோள் திட்டத்தை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கி உள்ளோம் – என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘நமது விண்வெளித்துறை நம்மை தொடர்ந்து பெருமை அடையச் செய்கிறது. இந்தியாவின் அதிக எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03யை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித்துறை சிறந்து விளங்குவதற்கும், புதுமைக்கும் அடையாளமாக மாறியுள்ளது பாராட்டத்தக்கது. அவர்களின் வெற்றி நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தி எண்ணற்றவர்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு இது ஊக்கம் அளிக்கும். இந்திய கடற்படைக்காகவும், அதற்கு தேவையான கருவிகளுடன் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட அதிநவீன ராக்கெட் இதுவாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பதால், எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படுகிறது.
இந்திய நிலப்பரப்பில் மல்டி பேண்ட் தொலைதொடர்பு சேவைகள், அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பு இணைப்புகள், கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும், கடற்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்த இது உதவும். சிஎம்எஸ் -03 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை கடற்படை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் வந்து பார்த்தனர்.
இந்த சிஎம்எஸ்3 செயற்கை கோளின் எடை 4400 கிலோ. இஸ்ரோ இதுவரை தயாரித்த அதிக எடையுள்ள செயற்கை கோள் ஜிசாட்11 அது 5800 கிலோ பிரெஞ்சு தயாரிப்பு ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.
சீனா செலுத்திய அதிக எடையுள்ள செயற்கைக்கோள் ஷாஜின்20 அது 8000 கிலோ எடையுள்ளது. அமெரிக்கா செலுத்திய அதிக எடையுள்ள செயற்கைக்கோள் ஜுப்பிடர்3 அது 9200 கிலோ எடையுள்ளது. சோவியத் ரஷ்யா காலத்திலே செலுத்திய செயற்கைக்கோள் புரோட்டான் தான் மிக அதிக எடையுள்ளது 17,000 கிலோ. அந்த வகையில் நாம் இன்னும் இருமடங்கு சக்தியை கூட்டவேண்டும்.
இதுவே ஆளிருக்கும் பயணம் என்றால் அமெரிக்காவின் ஆர்டிமிஸ் ஓரியான் 25,000 கிலோ ஐரோப்பாவின் ஏடிவி5 20,000 கிலோ என இருக்கிறது.
1972 இல் ஏவப்பட்ட அப்பல்லோ16 இன் எடை 52,000 கிலோ. இந்த இலக்கை இஸ்ரோ விரைவில் எட்டும்!





