
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர். அவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்துக்களில் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டிருக்கும் தனது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதி குறித்த படத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…
நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து, மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார். அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் இரு இனங்களுக்கு முன் வந்தே மாதரத்தின் 150ஆவது ஆண்டு விழா குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாரதியார் குறித்து புகழாரம் சூட்டினார். மகாகவி பாரதியும் பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடலை சுதந்திரத்திற்கான எழுச்சி பாடலாக நாடு முழுதும் கொண்டு சென்றார். அவர் தமிழில் அதற்காக இரண்டு மொழிபெயர்ப்புகளையும் செய்தார். வந்தே மாதரம் பாடலின் உடைய ஜீவன் வார்த்தையான வந்தே மாதரம் என்பதை தேசியக் கொடியில் அந்நாளில் பொரித்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மகாகவி பாரதி செய்த கொடி வணக்கப் பாடலையும் நினைவு கூர்ந்து பாடினார். தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் என்ற அந்த பாடலை குறிப்பிட்டு தேசியத்துக்கான எழுச்சியாக தமிழகம் எவ்வாறு திகழ்கிறது என்பதை வலியுறுத்தி காட்டினார் மேலும் சுதேசி கப்பல் விட்ட வ.உ.சி குறித்தும் புகழாரம் சூட்டினார்.
இன்று, தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவர் வசித்த திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுபூர்வ பாரதியார் நினைவு இல்லத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், பாரதிய மொழிகள் தினம் குறித்த போட்டி முடிவுகளை தன் சமூகத் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் பாரதிய மொழிகள் தினம் ஆக கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மூன்றாம் பதிப்பு கட்டுரைப் போட்டியின் முடிவுகளை தமிழ்நாடு மக்கள் மாளிகை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்திய மொழியியல் பன்முகத்தன்மையை வளர்த்தெடுப்பதன் மூலமும், இளைஞர்களிடையே இந்தியாவின் நீடித்த ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் மகாகவி பாரதியாரின் எழுச்சியூட்டும் மரபைக் கொண்டாட மக்கள் மாளிகை மேற்கொள்ளும் முயற்சியே இந்த வருடாந்திரப் போட்டியாகும். அனைத்து பங்கேற்பாளர்களின் உற்சாகமான பங்கேற்புக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். – என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக., மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டிருக்கும் பதிவில், திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறேன்.. ஜதி பல்லக்கில் கலந்து கொண்டு பின்பு நடக்கும் பாரதியார் விழாவில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் விழாவில் மரியாதைக்குரிய திரு இல கணேசன் அவர்களின் திரு உருவப்படத்தையும் எனது அன்பான அப்பா திரு குமரி அனந்தன் அவர்களின் படத்தையும் திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறேன்.. பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் இரண்டு பேரோடும் சேர்ந்து ஜதி பல்லக்கில் கலந்து கொண்ட இந்த படம் எனது நினைவில் இருந்து அகலாத படம் அதை இங்கே பகிர்கிறேன்.. அவர்கள் வழி தூய்மையான அரசியலை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று உறுதியோடு உழைத்து வருகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதிய தீர்க்கதரிசி. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் என்ற மகாகவியின் கனவு இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் நனவாகிக் கொண்டிருப்பது, அவருக்கான அர்ப்பணிப்பாகும்.
தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குகிறோம். மண் உள்ள காலம் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும். – என்று குறிப்பிட்டுள்ளார்.




