
ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று பரபரப்பு கிளம்பி, பின் இல்லை என்று அறிவிக்கப்பட்டு குழப்பங்கள் நிலவிய டிசம்பர் 4ம் தேதி நடந்தது என்ன? என்பது குறித்து கிருஷ்ணபிரியா ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மறுநாள் அதாவது 23-ம்தேதி காலையில் ஜெயலலிதாவுக்கு நினைவு வந்துவிட்டது.
அப்போது, நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினார் என்று என் தாய் இளவரசி என்னிடம் தெரிவித்தார் என கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அவரை சிறந்த சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல என் அத்தை சசிகலா விரும்பினார். இதற்காக ஜெயலலிதாவிடம் பேசினார். ஆனால், தன்னை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வதை ஜெயலலிதா விரும்பவில்லை, அதற்கு மறுத்துவிட்டார்.
அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, சசிகலாவைத் தவிர வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப் படவில்லை.
என்னுடைய தாயார் இளவரசியும், அத்தை சசிகலாவும் ஒன்றாக 3-வது தளத்தில் தங்கி இருந்தார்கள். ஜெயலலிதா அழைக்கும் போது சசிகலா மட்டுமே தனியாகப் போவார்.
ஜெயலலிதா சிகிச்சையின்போது உடல்நலம் தேறி இட்லி சாப்பிட்டது உண்மை.
உடல்நலம் தேறிவந்தபோது, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் ஆகியவற்றை சிறிய அளவு சாப்பிட்டார், ஐஸ்கிரீம் கூட சிறிதளவு சாப்பிட்டார்.
ஜெயலலிதாவுக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும். சிகிச்சையின் போது ஒருமுறை திராட்சை சாப்பிடுகையில் அவருக்கு இருமல் வந்துவிட்டது.
இப்படி அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஆணையத்தில்.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா மரணித்ததாக அறிவிக்கப்படுவதற்கு முதல்நாள், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்துவிட்டு, அவரின் மூளை செயல்பாட்டில் இருக்கிறது, ஆனால், எம்கோ கருவி பொருத்திய போதிலும், அவரின் இதயம் மீண்டும் இயக்கம் பெற முடியவில்லை எனத் தெரிவித்தனர்.
இருப்பினும் கிருஷ்ணபிரியா தெரிவித்திருந்த இப்போதைய வாக்குமூலம் சற்றே வித்தியாசப் படுகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் அகற்றப் பட்ட போது, அவரின் மூளை செயல்பாட்டில் இருந்ததா என்பது குறித்து தனக்கு தெரியாது என கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார்.



