விருதுநகர்: மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு சென்றடைகின்றனவா என்று ஆய்வு செய்ததாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை பயனாளிகளுக்கு வழங்கிய அவர், இன்று இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் இதுபோன்று 16 ஆயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.