தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி செல்கிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி சென்றுவிட்டு அங்கிருந்து பெங்களூருவிற்கு கர்நாடக முதல்வராக குமாரமசாமி பதவியேற்க உள்ள நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



